மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Thursday 1 December 2011

அண்ணாச்சி கடைகள்... -டைரக்டர் விக்ரமன் அழைப்பு


சில்லறை வணிகத்தில் 51 % அந்நிய முதலீட்டை அங்கீகரிப்பதென மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. "உலகVikramanபொருளாதர மயமாக்கல்"என்னும் கொள்கையால் இந்திய உற்பத்தி பெரிதும் பாதிக்கபட்டு இருக்கும் சூழ்நிலையில் சில்லறை வணிகத்தை அடியோடு முடக்கும் செயல் இது என்று நான் கருதுகிறேன்."வால்மார்ட்" போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும் போது மிகவும் குளிரூட்டப்பட்ட கடைகளை ஆரம்பிக்கும். வாடிக்கையாளர்களை கவர ஆரம்பத்தில் பல சலுகைகளை அறிவிக்கும். ஏற்கனவே வெளிநாட்டு மோகம் கொண்ட நமது நாட்டு நாகரீக இளைஞர்கள் இவைகளை மட்டுமே தேடிச் செல்ல தொடங்குவார்கள். இதனால் நமது சில்லறை வணிகர்களின் வியாபாரம் மெல்ல மெல்ல நலிவடைந்து ஆறுமாதத்துக்குள்ளோ அல்லது ஒரு வருடதுக்குள்ளோ கடையை மூடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அதன்பின் தான் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தன் சுயரூபத்தை காட்டும்.சில்லறை வணிகத்தில் ஏகபோக உரிமை இவர்களின் கைக்கு வந்த பிறகு இவர்கள் வைப்பது தான் விலை.வேறு வழியின்றி வாங்கித்தான் தொலைக்க வேண்டும்.இது போன்ற பெரிய கடைகள் தரமானவை என்ற ஒரு தவறான எண்ணத்தை நமக்குள் நாமே வளர்த்துகொண்டு இருக்கிறோம். எப்படி கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஊடுருவியதோ அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் இதுவும்.நமது நாட்டில் சில்லறை வணிகர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் வெறும் வணிகர்கள் மட்டுமல்ல நமது உறவினர்கள்.நமது மண்ணில் பிறந்தவர்கள். நமது கஷ்டம் தெரிந்தவர்கள்.
தமிழ்நாட்டில் அநேகமான எல்லா கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒரு " அண்ணாச்சி" கடை வைத்திருப்பார். இந்த கடைகளில் பெரும்பாலும் ஏழை, நடுத்தர மக்கள்தான் பொருட்கள் வாங்குவார்கள். பல நேரங்களில் நாம் இவர்கள் கடையில் கடன் சொல்லி தான் வாங்குகிறோம். சிலரால் ஆறு மாதங்களாகியும் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவும்.தயங்கி தயங்கி அண்ணாச்சி கடையில் மீண்டும் 2 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் நல்லெண்னை என்று கடன் கேட்ப்போம். நமது குடும்ப நிலைமை தெரிந்து கொண்ட அந்த அண்ணாச்சியும் "ஏற்கனவே ஆறு மாதமா பாக்கி இருக்கு என்று மெதுவாக சொல்லிக்கொண்டே , சரி என்ன செய்ய? உங்க வீட்டுக்காரர் ஆறு மாசமா படுத்த படுக்கையா இருக்காரு, நீங்க என்ன பண்ணுவீங்க, பணம் வந்ததும் மொதல்ல என் கடனை செட்டில் பண்ணிடுங்க" என்று சொல்லி மீண்டும் நாம் கேட்ட பொருளை கொடுக்கத்தான் செய்வார்.
பணத்தை திருப்பி கொடுத்ததும் 500 ரூபாய்க்கோ,1000 ரூபாய்க்கோ பொருள் வாங்கினால் நாம் "கொசுறு" என்று எதாவது கேட்ப்போம். அதையும் சிரித்த முகத்துடன் தருவார். இது போன்ற பாசமிக்க உறவை, நாம் கஷ்டப்படும்போது கடன் தந்து உதவும் பண்பை, இந்த பன்னாட்டு நிருவனங்களிடம் நாம் எதிர்ப்பார்க்க முடியுமா? சில்லறை வணிகத்தில் ஈடுப்பட்டுள்ள எவருமே பெரிய கோடிஸ்வரர் ஆகி விடுவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஓரளவிற்கு நியாயமான விலையில் விற்பதால் பெரிய லாபத்தை ஈட்டுவது இல்லை. அதை நீங்கள் உள்ள தெருவில் 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் கடை வைத்திருக்கும் கடைக்காரரை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.ஆனால் இப்பொழுது சில்லறை வணிகத்தில் கால் பதிக்க இருக்கும் "வால்மார்ட்" நிறுவன முதலாளி சில ஆண்டுகளுக்கு முன்பு "பில்கேட்ஸை" மிஞ்சிய கோடிஸ்வரர்.
ஆகவே சகோதரர்களே, சகோதரிகளே, நம்மில் ஒருவராக நம்மை நம்பியே வாழும் நமது தெரு பூர்விக சில்லறை வணிகர்களை தொடர்ந்து ஆதரிப்போம். மத்திய அரசின் இந்த முயற்சியை எதிர்ப்போம். மீறி அந்த நிறுவனங்கள் இங்கு கால்பதிக்குமேயானால், நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதை முழுமையாக நிராகரிப்போம். நிச்சயம் இதில் ஒன்றுப்பட்டு தமிழ் இனம் ஜெயிக்கும். தமிழர்களின் ஒற்றுமை உலகத்திற்கு தெரியும்.
நாம்ஜெயித்துக்காட்டினாலே மற்ற மாநிலங்களும் நம்மை பின் பற்றி இந்த பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்கும்.இது நமது சகோதரர்களுக்காக நாம் கொடுக்கும் குரல். ஒன்று படுவோம் அந்நிய சக்தியை விரட்டியடிப்போம்."

No comments:

Post a Comment