ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்னுடா’ என்று சவால் விட்ட போலீஸ் கதைளில் ஒன்றுதான் இதுவும். காக்கி சட்டையில் காமெடி பட்டனை தைத்து ஒரு புதுரக யூனிபார்ஃம் ரெடி பண்ணியிருக்கிறார் டைரக்டர் தரணி. பாதி வசனங்களை சிம்புவே எழுதியிருப்பார் போல. அப்பாவை போலவே அநியாயத்துக்கு சுய புராணம்.
ஒரே அம்மா, ரெண்டு அப்பா. இப்படியொரு மாற்றான் தந்தை சூழலில் வளரும் சிம்பு, வளர்ந்து பெரியவராகி இன்ஸ்பெக்டர் ஆகிவிடுகிறார். ஆனாலும் தனது புது அப்பா மீதும், அவருக்கு பிறக்கும் ரெண்டாவது மகனான தன் தம்பி மீதும் மாறாத கோபத்திலிருக்கிறார். அண்ணனுக்கு எதிராக தம்பியை திசை திருப்புகிறது வில்லன் கோஷ்டி. ஒருகட்டத்தில் உண்மை தெரியவர, தம்பியை தம்பியாகவும் தகப்பனை தகப்பனாகவும் சிம்பு ஏற்றுக் கொள்வதுதான் மெயின் கதை. இடையில் வரும் போர்ஷன்களை பெருமளவு லபக்கிக் கொள்ளும் வில்லன்-ஹீரோ மோதல்கள் முறையே தமிழ்சினிமாவின் நாலாவது ஐந்தாவது டிக்காஷன் ரகம் என்பதுதான் அன் சகிக்கபுள்.
ஒரு மசாலா படத்தில் ஹீரோவின் அறிமுகம் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கிறது சிம்புவின் என்ட்ரி. (அவ்வளவு பெரிய பெரிய சாலை வசதிகள் இருந்தும் ஏன் சுவற்றை உடைத்துக் கொண்டு அவரது ஜீப் உள்ளே வர வேண்டும்? மஸ்ஸ்ஸாலாவாம்) இவர் பெயர் ஒஸ்தி வேலன். சாதாரண கான்ஸ்டபுளின் கன்னத்தில் அறைவதில் ஆரம்பித்து, கமிஷனரை உதறல் எடுக்க வைப்பது வரை இந்த ஒஸ்தி வேலனின் ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் ரசித்துக் கொண்டேயிருக்கலாம். முதன் முறையாக சிம்புவின் பாடி-லாங்குவேஜ் எல்லாருக்கும் பிடித்திருப்பதுதான் ஆச்சர்யம். ஆச்சர்யமாக சில காட்சிகளில் கண் கலங்கவும் வைக்கிறார். குறிப்பாக நாசர் மருத்துவமனையில் படுத்திருக்கும் போது அவரை முதன் முறையாக ‘அப்பா...’ என்றழைக்கிற காட்சி.
வார்த்தைக்கு வார்த்தை ஆடுகளம் தனுஷ் பாணியில் ‘சுட்டே புடுவேன்’ என்பதையும், சில காட்சிகளில் யாத்தே... யாத்தே... பாடல் ஒலிப்பதையும் எந்த ரைவலில் சேர்க்க? அழகான அன்னப்பறவையை கூட எலிப்பொறி வைத்து பிடிக்கிற வழக்கம் இருக்கிறது சிம்புவுக்கு. ரிச்சாவுடன் காதல் வயப்படுவதில் ஆரம்பித்து, அதே காதலை வெளிப்படுத்துவது வரை இந்த எலிப்பொறி மெத்தர்டுதான்.
ரிச்சா கங்கோபாத்யாவுக்கு கங்கையில் முக்கியெடுத்த மாதிரி அப்படியொரு தேகம். அரை தாவணிக்கு தப்பி தெரியும் இவரது மைதா மாவு பிரதேசங்களுக்காகவே ரிப்பீட் ஆடியன்ஸ் நிச்சயம். (ஏன் தாயி முகத்தை மட்டும் அப்படி கோவமாவே வச்சுக்கணும்? ) படத்தில் இவர் பேசும் வசனங்களை ஒரு கர்சீப்பில் அள்ளிவிடலாம். அவ்வளவு சிறிசு. ஆனாலும் ‘காவல் துறை’ என்பதுதான் சிம்புவின் பெயர் என்று நினைக்கிற அளவுக்கு அம்மாஞ்சியாக இருப்பதெல்லாம் அநியாயம்.
இவரது அப்பாவாக நடித்திருக்கிறார் வி.தா.வ தயாரிப்பாளர் கணேஷ். பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் இந்த பார்ட்டிக்கு இந்த படத்தில் சோக எபிசோட். தனது சாவுக்கு பின்தான் தன் மகளின் கல்யாணம் நடக்கும் என்பதால் செத்தே போகிறார்.
மிக பொருத்தமான கேரக்டரில் ஜித்தன் ரமேஷ். ஆச்சர்யமாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
சந்தானம் வழக்கம்போலவே காமெடி திருவிழா நடத்தியிருக்கிறார். பாவா லட்சுமணனை பார்த்து ‘ஏய்... இங்க வா. கோவா படத்தில் வர்ற பிரேம்ஜி மாதிரியே இருக்கியே’ என்று கலாய்ப்பதையெல்லாம் தியேட்டர் தாங்காமல் ரசிக்கிறது பொதுஜனம்.
கலாசலா, வாடி வாடி என் க்யூட் பொண்டாட்டி என்று சிம்புவுக்காகவே செதுக்கப்பட்ட பாடல்கள், கோரியோ கிராஃப். தமனின் இசை கலக்கல் மற்றும் குலுக்கல் மேளா.
சிலர் அமைக்கும் சண்டைக்காட்சிகளில் யதார்த்தம் இருக்கும். நெருப்பும் பறக்கும். ஆனால் கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகள் அப்படியல்ல, நெருப்பை மூட்டி அதில் யதார்த்தத்தை கொளுத்தி விடுவார். இப்படத்திலும் அப்படியே. கோபிநாத்தின் ஒளிப்பதிவு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
தில், தூள், கில்லி என்று தரணியை அதிர வைத்த தரணி, அதையெல்லாம் தாண்டிய ஒஸ்தியை எப்போது தருவார் என்ற ஏக்கத்தை மீண்டும் ஒரு முறை தந்திருக்கிறது இந்த ஒஸ்தி.
-ஆர்.எஸ்.அந்தணன்
No comments:
Post a Comment