மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Thursday 8 December 2011

அதிமுகவில் வடிவேலா? -கொதிக்கிறார் சிங்கமுத்து


அதிமுகவில் வடிவேலு! கடந்த வார பரபரப்பு செய்தி இதுதான். வடிவேலு அதிமுகவில் சேர்ந்துவிட்டால், சிங்கமுத்து என்னாவார் என்ற கேள்வி மனதில் எழுமல்லவா? நமக்கும் அப்படி ஒரு கேள்வி எழ, சிங்கமுத்துவுக்கே போன் அடித்தோம்.
அதுவா...? என்று அட்டகாசமாக சிரிக்க ஆரம்பித்தவர், வாங்க நேர்ல பேசலாம் என்றார். அவரது பதில்களில் ஒரு ஆக்ஷன் சினிமாவை பார்த்த மாதிரி அத்தனை விஷயங்கள் அடங்கியிருந்தன...
வடிவேலு அதிமுக வில் சேரப்போகிறாராமே?
நானும் அந்த விஷயத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். அதில் எந்தளவுக்கு உண்மைSingamuthuஇருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு நல்ல ஆட்சி வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காக அரும்பாடு பட்டவர் வடிவேலு. கலைஞருடைய திட்டங்களை காப்பியடித்துதான் தேர்தல் அறிக்கையை அம்மா தயாரித்தார்கள் என்று சொன்னவர்தான் இவர். எல்லாரும் திமுகவுக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று இவர் வியர்வை வடிய கூக்குரலிட, அதை அழகிரி துடைக்க... அப்படியெல்லாம் அதிமுகவுக்கு எதிராக வியர்வை சிந்தியவர்தான் வடிவேலு. திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்தான் போலீஸ் மந்திரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மிதப்பில் திரிந்தவர் அவர். இப்போது எங்கள் கட்சிக்கு வரப்போகிறாராமா?
அவர்தான் ஜெயலலிதாவை திட்டவில்லை என்று கூறியிருக்கிறாரே?
அம்மாவை திட்டினாரா, திட்டவில்லையா என்று இவர் சொல்ல வேண்டாம். அதற்கெல்லாம் ஆதாரமாக அம்மாவிடம் இருக்கிறது கேசட். அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதே அம்மாவை திட்டுவது போலதானே? அம்மா வேறு. அதிமுக வேறா? வடிவேலு தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்து 'அதிமுக கூடாரம் காலியாகிவிட்டது' என்று சொல்லிக் கொண்டே ஆட்டம் போட்டதை மக்கள் மறக்கவில்லை.
அதிமுக வர வேண்டும் என்று வாக்காளர்கள் நினைத்தது மக்களுடைய ஆட்சி வர வேண்டும் என்பதற்காகதான். எனக்காகவோ, வடிவேலுவுக்காகவோ யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அத்தனை ஓட்டுகளும் அம்மாவுடைய முகத்திற்காக விழுந்தவைதான். இவருக்கு வாக்கு வங்கி இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் போட்ட ஆட்டத்தை யாராவது மறக்க முடியுமா? அப்படி வாக்கு வங்கி என்று ஒன்று இருந்திருந்தால், திமுக ஏன் இவ்வளவு கேவலமாக தோற்க வேண்டும்? வடிவேலு அதிமுக வுக்கு வருவதால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. பாதிப்பும் இல்லை. அவரை சேர்ப்பதும், சேர்க்காமலிருப்பதும் மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்குள்ள எங்கள் அம்மா முடிவு செய்ய வேண்டியது.
வடிவேலு இப்போது படங்களில் நடிப்பதில்லை. நிஜமாகவே வாய்ப்புகள் வரவில்லையா? அல்லது யாராவது அதை தடுக்கிறார்களா?
யாரும் தடுக்கவில்லை. அவரை யாரும் ஒப்பந்தம் செய்ய போவதில்லை என்பதுதான் உண்மை. மக்களுக்கே அவரை பிடிக்காமல் போய்விட்ட பிறகு, யார் அவரை வைத்து படம் எடுப்பார்கள்?
சரி, அதையெல்லாம் விடுங்கள். உங்கள் நிலத்தகராறு இப்போது எந்த அளவில் இருக்கிறது?
அதைப்பற்றி பேசினால் நிறைய பேச வேண்டும். ஆனால் என்னை வீடு புகுந்து மிரட்டியவர்கள், என் கண்ணெதிரிலேயே என் மனைவியின் செயினை பிடுங்கி சென்றவர்கள் எல்லாருமே இன்று எந்த ஜெயிலில் களி தின்கிறார்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, வடிவேலுவுக்கு ஆதரவாக என்னை மிரட்டிய ஒரு நடிகரை கூட ஆண்டவன் அழைத்துக் கொண்டான். இதிலிருந்தே புரிந்து கொள்ளுங்கள், ஆண்டவனும் நியாயமும் யார் பக்கம் என்று.
நில விஷயத்தில் அந்த இடத்துக்கு சொந்தக்காரரான பிரபு என்பவரே என் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் வடிவேலு தனது சந்தேக புத்தியால் என்னிடம் இருந்து ஏழு கோடி ரூபாயை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அப்போதைய கவுன்சிலர் தனசேகரன், ஜே.கே.ரித்தீஷ், ஆதம்பாவா, மேனேஜர் சங்கர் ஆகியோரை அனுப்பி என்னை மிரட்டினார். இந்த பணத்தை அவர்கள் பங்கு போட திட்டமிட்டதுதான் வேடிக்கை. இதில் ஒரு கோடியை துணை முதல்வருக்கு தரணும் என்று கூட பேசிக் கொண்டார்கள் அவர்கள். இவர்கள் எந்தெந்த தேதியில் வந்து என்னை மிரட்டினார்கள் என்பதையெல்லாம் டைரியில் குறித்து வைத்திருக்கிறேன் நான்.
அப்போது நடந்த திமுக ஆட்சியில் எனக்கு நியாயம் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நான் போலீசுக்கு போனேன். அப்போது விருகம்பாக்கம் ஸ்டேஷனில் இருந்த எஸ்.ஐ அந்த புகாரை கிழித்துப் போட்டார். அதே திமுக ஆட்சியிலேயே அந்த எஸ்.ஐ. வேறொரு விஷயத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு இப்போதும் வீட்டில்தான் இருக்கிறார்.
கவுன்சிலர் தனசேகரன் அவரது வீட்டுக்கே வரச்சொல்லி மிரட்டினார். பாடியை துண்டு துண்டாக வெட்டி போட்டுவிடுவேன் என்று அவர் சொன்னபோது கூட, 'ஏண்ணே அதை தனித்தனியா போடுறீங்க. ஒரே இடத்துல போட்டுட்டா வசதியா போயிடும்ல' என்று ஜோக்கடித்தேன் நான். ஏனென்றால் தவறு செய்திருந்தால் தானே நான் அஞ்சி நடுங்கணும்? எங்கிட்ட இருந்து எதுவும் பெயராமல் போனதால் கடைசியாக என் மனைவி கழுத்திலிருந்த 12 பவுன் சங்கிலியை கழற்றி தரச்சொல்லி வாங்கிட்டு போனவங்க அவங்க. இந்த நில விஷயத்தில் என்னிடமிருந்து எதுவும் பெயரவில்லை என்றவுடன் கலைஞரை நேரில் சந்தித்த வடிவேலு, சிங்கமுத்து அதிமுக காரன் என்று போட்டுக் கொடுத்துதான் என்னை கைது பண்ணவே வைத்தார்.
ஒருவேளை வடிவேலு அதிமுகவில் இணைந்தால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
நான் 1972 லிருந்து அதிமுகவில் இருக்கேன். 1989 லிருந்து அம்மாவுக்கும் கட்சிக்கும் விசுவாசியா இருக்கேன். இப்ப கேட்டால் கூட உறுப்பினர் கார்டை காட்டுவேன். நான் பிரச்சாரத்துக்கு கிளம்புறேன்னு தெரிஞ்சதும், பொட்டு சுரேஷ் தன் ஆட்களோட என் வீட்டுக்கே வந்தாரு. அழகிரி ஒரு கோடி ரூபா உங்களுக்கு தர சொல்லியிருக்காரு. நாளைக்கு அதிமுகவுக்கு ஆதரவா நீங்க பிரச்சாரத்துக்கு கிளம்ப கூடாதுன்னு சொன்னார். இந்த பணத்தை வாங்கினால் தனி மனிதனா எனக்கு நல்லது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வர்றதுதான் நாட்டுக்கு நல்லதுன்னு சொல்லி அந்த பணத்தை வாங்க மறுத்து அனுப்பி வைச்சேன். அதற்கு சாட்சி கூட இருக்கிறது. நான் எப்பவும் என் கட்சிக்குதான் கட்டுப்பட்டவன்.
கட்சியில் ஏதாவது பதவி கிடைக்கும்னு எதிர்பார்ப்பு இருக்கிறதா...?
அம்மாவுடைய உண்மையான விசுவாசி என்பதை விட சிறந்த பதவி வேறு இல்லைன்னு நினைக்கிறேன். வடிவேலு விஷயத்தில் இன்னும் நிறைய உண்மைகள் இருக்கு. சீக்கிரம் அது பற்றியும் பேசுவேன் என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு அவசரம் அவசரமாக கிளம்பினார் சிங்கமுத்து.
-ஆர்.எஸ்.அந்தணன்
படம் -சீனு

1 comment:

  1. Hi i Read Your Information its Really Very interesting & Usefull!
    my atoz tamil mp3 songs 100% free site:

    http://www.atoztamilmp3songs.blogspot.com/
    http://www.tamilmp3songworld.blogspot.com/
    please visit my sites.
    thanks.

    ReplyDelete