Something ...
மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்
Saturday, 29 October 2011
வேலாயுதம் - விமர்சனம்
தன் படங்களில் எல்லாம் ச்சும்மா சுழற்றி சுழற்றி பஞ்ச் டயலாக் அடிப்பார் விஜய் (நோக்கு வர்மம் மாதிரி இது 'நாக்கு' வர்மமோ என்னவோ). இந்த படத்தில் அது குறைச்சல் என்பதே முதல் திருப்தி. பொட்டு பொடிசுகள் முதல், தட்டுத் தடுமாறும் பெரிசுகள் வரைக்கும் விஜய் என்றாலே குஷியாவார்கள். அதை நினைத்து நினைத்து ஆடித் தள்ளியிருக்கிறார் அவரும். என்னதான் இருந்தாலும் கடைசியில் அந்த ரயிலை பிடிச்சு.... (ஸ். அப்பாடா)
ஊழலுக்கும் அராஜகத்திற்கும் பித்தலாட்டத்திற்கும் எதிராக ஒருவன் பிறந்து வர மாட்டானா என்று ஜனங்கள் ஏங்கி தவிக்கும் போது, வேலாயுதம் என்றொரு கற்பனை கேரக்டரை உருவாக்குகிறார் ஜர்னலிஸ்ட் ஜெனிலியா. அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அத்தனையிலும் விஜய் சம்பந்தப்படுகிறார். இவர்தான் வேலாயுதம் என்று ஊரே நினைத்துக் கொண்டிருக்க, அந்த வேலாயுதம் நாம்தான் என்று தெரியாமலே சுற்றிக் கொண்டிருக்கிறது பார்ட்டி.
நடக்கவிருக்கும் வெடிகுண்டு அபாயங்களுக்கு சற்று முன் அங்கு ஆஜராகும் விஜய், அவரே அறியாமல் யதார்த்தமாக அதை அப்புறப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. (இதை வலிய திணிக்காமல் இயல்பாக சொல்லியிருக்கும் இயக்குனர் ராஜாவுக்கு இந்த இடத்தில் ஒரு சபாஷ்) இதன் காரணமாக பலர் காப்பாற்றப்பட 'வேலாயுதம் துணை' என்று நெஞ்சில் பச்சை குத்திக் கொள்கிற அளவுக்கு பித்துப்பிடித்து அலைகிறார்கள் மக்கள்.
'யாருங்க அந்த வேலாயுதம்?' என்று இவரே ஆச்சர்யப்பட, 'அது நீதான்' என்கிறார் ஜெனிலியா. 'அட போங்க. தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும். அதுதான் நம்ம வேலை' என்று ஒதுங்கிப் போகும் அவருக்குள் வேலாயுதமே வந்து பேயாட்டம் போடுகிற சூழலை உருவாக்குகிறது விதி. அப்புறம்...? வெறிகொண்டு புகுந்து... வில்லன்களை வகுந்து... நாட்டையே காப்பாற்றி... டிபிக்கல் விஜய் படமாக முடிந்து போகிறது அத்தனையும்.
வழக்கத்தைவிட அதிக உற்சாகம் தெரிகிறது விஜய்யிடம். ஒன்றுக்கு ரெண்டு பேரல்லவா? ஹீரோயின்களிடம் பஞ்சுமிட்டாயாக கலர் காட்டுகிறார். கூடவே சந்தானம். பிரித்து மேய்கிறார்கள் ரெண்டு பேரும். 'இந்த மாநிலத்துக்கே...' என்று அல்லக்கைகள் ஜால்ரா வாசிக்கும்போது 'மூடு மூடு...' என்கிறாரே விஜய், ஆர்வத்தை கிளப்பிவிட்டு அதை அச்சத்தால் மூடுவதாக கொள்ளலாமா? தங்கை சரண்யா மோகனிடம் இவர் காட்டும் பாசத்தில் உலக தங்கச்சிகளே உருகிப் போவார்கள். (இமேஜ் கிராஃப் ஏறியிருக்குமே)
ஜெனிலியாவுக்கு தரப்பட்ட முக்கியத்துவம் ஹன்சிகாவுக்கு இல்லைதான் என்றாலும், அதைதாண்டி கொடுப்பதில் அர்த்தமும் இல்லை. ஹன்சிகாதான் ஊரே கூடி வந்து ரெஸ்ட் எடுக்கிற மாதிரி வெண்ணையால் செய்யப்பட்ட கவர்ச்சி திண்ணையே வைத்திருக்கிறாரே!
தனியாக குறிப்பிட்டு சிலாகிக்க வேண்டியவர் சந்தானம். அடிக்கிற ஜோக்குகள் அத்தனைக்கும் ஏ-கோபித்து ரசிக்கிறது மொத்த ஜனமும். அதிலும் ரங்கநாதன் தெருவில் சூட்கேஸ் திருடும் அந்த காட்சியில் ஒரு பெண் வந்து 'காமப் பிசாசே' என்று திட்டிவிட்டு அகல்வதும், இவர் கீழே குனிந்து பார்ப்பதும் ஹையோ ஹையோ!
விஜய் படங்களில் யார் இசையமைப்பாளராக இருந்தாலும், பாடல்கள் ஸ்பெஷல் இருக்கும். இந்த படத்திலும் அப்படிதான். விஜய் ஆன்ட்டனியின் 'உருட்டல்களையும்' ஒரு ரிதத்தோடு ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவில் சகல உணர்ச்சிகளையும் பரிமாறுகிறார் ப்ரியன்.
ஃபார்முலா ஹீரோக்களுக்கு படம் பண்ணுவதில் இருக்கிற அசௌகர்யத்தை, சௌகர்யமாக கையாண்டு 'சவுண்டான' வெற்றி தந்திருக்கிறார் டைரக்டர் ராஜா.
'வெல்' ஆயுதம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
www.tamilcinema.com
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment