நடிகர் சிவகுமாரின் இலக்கிய சொற்பொழிவு பல ஆண்டுகாலமாக இலக்கிய சொற்பொழிவாற்றி வரும் அறிஞர்களை கூட வியப்பில் ஆழ்த்துகிற அளவுக்கு இருந்து வருகிறது. மிக குறுகிய காலத்தில் இப்படி ஒரு நற்பெயரை எடுத்திருக்கும் அவர் சில நேரங்களில் தேவையில்லாத விஷயங்களை பேசி வருவதாக ஆதங்கப்பட்டிருக்கிறது ஒரு இணையதளம்.
அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறோம். இது தொடர்பான எல்லா விமர்சனங்களுக்கும் சம்பந்தப்பட்ட இணையதளமும், நடிகர் சிவகுமாருமே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இணைப்புக்கு பின்வரும் தொடர்பை சொடுக்குக- http://bit.ly/tkqB2M
திரு. சிவக்குமார் அவர்களே!
சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.
குறிப்பாக பெண்பிள்ளைகள் குழுமியிருக்கும் கல்லூரி வளாகத்தில் உங்கள் சொற் பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஆலோசனை தருகிறேன் என்ற சாக்கில் "கழிப்பறை வடி காலில் 2 டன் கருத்தடைச் சாதனம் புதையுண்டுக் கிடந்ததாக எனக்குத் தகவல் வந்தது" என்று பயமுறுத்தி பெற்றோர் களின் வயிற்றில் புளியைக் கறைக்கிறீர்கள். ஒரு கருத் தடைச் சாதனத்தின் எடை சுமார் ஒரு கிராம் என்று வைத்துப் பார்த்தாலும் நீங்கள் சொன்ன கணக்குக்கு சுமார் இரண்டு மில்லியன் கருத்தடைச் சாதனம் வருகிறது.
எந்த கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் கழிப்பறையில் கருத்தடைச் சாதனத்தை அவர்கள் பணியாளர்களின் உபயோகத்திற்காக இருப்பு வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுக் கூற முடியுமா? உங்களுடைய கூற்றை கேட்கையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்கள் குழந்தைகள் அனைவரும் கற்பிழந்தவர்கள் என்ற மாயையை உருவாக்கி இருக்கிறீர்கள்.
இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது. பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.
"பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்" என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.
No comments:
Post a Comment