தப்பான அட்ரசுக்கு போன தந்தி மாதிரி, அழகிருந்தும் நிராகரிக்கப்படும் நடிகைகள் அநேகம் பேர் இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். தங்க வேட்டை நடத்தும் வேகத்தோடு வந்த இவர்களுக்கு தகரம் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி, லிப்ஸ்டிக்கும் வெற்று சிரிப்புமாக வாழ்க்கையை முடித்திருப்பார்கள். நாம் பார்க்கும் அநேக துணை நடிகைகள் ஒரு காலத்தில் இன்டஸ்ட்ரியை புரட்டிப் போடும் லட்சியத்தோடு இப்படி ரயிலேறி வந்தவர்கள்தான்.
ஆனால் பெரிய ஹிட் படத்தில் அறிமுகமாகி, அசர வைக்கும் அழகும் கொண்ட சில நடிகைகள் அதன்பின் காணாமல் போனது ஏன் என்று ஆராய்ந்தால் பெரிய கேள்விக்குறியே மிச்சமாகும். சமீபத்தில் வெளிவந்து அந்த வருடத்தின் மாஸ் ஹிட் வரிசையில் இடம் பிடித்த கோ படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படத்தில் நடித்த ராதா மகள் கார்த்திகா, அதன் பின் என்னவானார்? ஆந்திராவுல கூப்பிட்டாக, கேரளாவுல கூப்பிட்டாக என்று பத்திரிகைகளில் அவ்வப்போது பேட்டி வந்ததே ஒழிய அடுத்த படத்திற்கான அறிவிப்பு மட்டும் வரவேயில்லை. நல்லவேளையாக பாரதிராஜாவே கை கொடுத்திருக்கிறார் இப்போது. இவர் இயக்கப் போகும் அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்தில் கார்த்திகாவும் ஒரு ஹீரோயின்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராதா, என்னுடைய இரண்டாவது மகளை சினிமாவில் நடிக்க வைக்கப் போறதா எழுதுறாங்க. உண்மையில் என்னோட முதல் மகளுக்கே சரியான கதையும் பொறுத்தமான புராஜக்டும் அமையல. நிறைய படங்கள் வருது. ஆனால் எல்லாத்தையும் ஒப்புக் கொள்ள முடியாதே என்று கூறியிருக்கிறார். இத்தனைக்கும் கோ படத்திற்கு பிறகு ஆந்திராவில் பத்து படங்களும், தமிழ்நாட்டில் ஐந்தாறு படங்களும் ஹிட் ஆகியிருக்கின்றன. இவையெல்லாம் எப்படி கார்த்திகாவை மறந்தன. அல்லது ராதாவின் கண்களுக்குதான் இந்த படங்கள் சிக்கவில்லையா?
கார்த்திகா நிலைமைதான் இப்படி என்றால் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த வசுந்தராவின் நிலைமையும் ஏறத்தாழ இப்படிதான். கட்டை குரல், கடைந்தெடுத்த ஆண் பிள்ளைத்தனம் என்று எசகு பிசகு அழகுதான் இந்த வசுந்தரா. சுமார் முன்னு£று நடிகைகளை பேராண்மை படத்திற்காக வரவழைத்த டைரக்டர் ஜனநாதன், இந்த ஆண்பிள்ளை சாயலுக்காகவே வசுந்தராவை தன் படத்தில் நடிக்க வைத்தார். சொல்லி வைத்த மாதிரி பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்(என்று சொல்லப்படுகிறது). அப்படியிருந்தும் அடுத்த படம் என்ன என்று வசுந்தராவை நேரில் பார்த்தால் கேட்க முடியாது. சட்டென்று பதில் சொல்கிற வாய்ப்பு அவருக்கும் இல்லை இப்போது.
அனுயாவின் நிலைமை ரொம்பவே தடுமாற்றம். சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர். அப்படத்தின் வெற்றியை நாடறியும். இப்போதும் நகைச்சுவை சேனல்களில் இவருக்கும் ஜீவாவுக்குமான ஏட்டிக்கு போட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாமும் ரசித்துக் கொண்டே இருக்கிறோம் நாள் முழுக்க. அதன்பின் முன்னணி இயக்குனர்கள் தன்னை கொத்திக் கொண்டு போவார்கள் என்று நினைத்திருந்த அனுயாவுக்கு மதுரை சம்பவம் என்ற பட்ஜெட் படம்தான் வாய்த்தது. அப்புறம் ஆளே காணாமல் போனார். விசாரித்தால் சுந்தர்சியுடன் மறுபக்கம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாரே என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இவர்களை சொல்வானேன்? இன்னும் ஐந்தாறு வருடங்களாவது தாக்கு பிடிப்பார் என்று நம்பப்பட்ட நமீதா என்னவானார்? செங்கல்பட்டு தாண்டி போகும்போதெல்லாம் ஏதாவது ஊரில் கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறது போஸ்டர்ஸ். நகைக்கடையில் துவங்கி, சைக்கிள் கம்பெனி வரைக்கும் ரிப்பன் வெட்டு நாயகி நம்ம நமீதாதான். நல்ல கேரக்டரா அமைஞ்சாதான் சினிமா. இல்லைன்னா வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுவேன் என்கிறார் நமீ. மானாட மயிலாட நிகழ்ச்சிக்கே மூடுவிழா நடத்திவிட்டார்கள். இனி சின்னத்திரையில் கூட நமீதாவும் அவரது கவர்ச்சி மந்திரமான 'மச்சான்ஸ்' என்கிற வார்த்தையும் சிக்கவே சிக்காது போலிருக்கிறது.
இன்னும் யோசித்தால் பட்டியல் நீளும். அதனால் இவர்களோடு நிறுத்திக் கொள்வோம்.
No comments:
Post a Comment