மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday, 28 December 2011

ராஜபாட்டை - விமர்சனம்

Mambattiyanஅன்னா ஹசாரேவின் லேட்டஸ்ட் உண்ணாவிரதம் போல, எதிர்பாராத அதிர்ச்சிதான் இந்த ராஜபாட்டை. (அவ்ளோ பெரிய மைதானத்தில் 100 பேர் தேறலயாமே?) வெ.க.கு, அ.சா.கு, நா.ம.அ என்று நல்ல நல்ல படங்களை இயக்கிய சுசீந்திரனுக்கு வந்த திடீர் மசாலா ஆசை கோடம்பாக்கத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எழுதினால் அது இன்னொரு டிசம்பர் இருபத்தியாறாகிவிடும் என்பதால் விமர்சனத்திற்குள் செல்வோம்.
அநாதை ஆசிரமம் நடத்தி வரும் பெரியவர் விஸ்வநாத்திடமிருந்து அந்த இடத்தை அபகரிக்க துடிக்கிறார் பெண் அரசியல்வாதி ஒருவர். இதற்கு பெரியவர் மகனும் உடந்தை. ஆசிரமம் கைமாறினால் அத்தனை குழந்தைகளும் நடுத்தெருவில்தான் என்பதால் தன்னையறியாமல் கோதாவில் குதிக்கும் விக்ரம், தன் ஒற்றைக் கையால் மிஷின் கன் வில்லன்களை கூட பந்தாடுகிறார். பெரியவர் வெளியில் இருந்தால்தானே கையெழுத்து போட முடியும்? அவரையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறார். கொலைவெறியோடு துரத்தும் கும்பல் விக்ரமின் லவ்வர் தீக்ஷாவையும் கடத்துகிறது. எப்படியோ, இடம் கைமாறி பிள்ளைகள் எல்லாம் நடுத்தெருவுக்கு வருகிறார்கள்.
இதற்கிடையில் சொத்துக்கு ஆசைப்பட்டுதான் தன் மீது அன்பு காட்டுகிறார் விக்ரம் என்று முடிவு செய்யும் விஸ்வநாத் அவரிடமிருந்து பிரிய, அடுத்தது என்னாச்சு என்பதுதான் மிச்ச மீதி. 
சங்கராபரணம் விஸ்வநாத்தை ‘சங்கட’ புராணம் பாட வைத்திருக்கிறார்கள். எப்படி லவ் பண்ணுவது என்று அவர் விக்ரமுக்கு கிளாஸ் எடுப்பது ரொம்பவே ஓவர் என்றாலும், ரசிக்க முடிவதுதான் ஆச்சர்யம். மனைவியின் சிலையை புல்டவுசர் கொண்டு தகர்க்கும்போது அவர் கண்களில் வழியும் கண்ணீர் நம்மை ஃபீல் பண்ண வைக்கிறது.
ஜிம் பாய் என்பதால் மற்றொரு பிரசாந்த் போல உடம்பேறியும் முறுக்கேறியும் திரிகிறார் விக்ரம். எழுபது வயதில் அமிதாப்பச்சனையும், அதே வயதில் எம்.ஜி.ஆரையும் பார்த்த நமது கண்களுக்கு ஐம்பத்தைந்து வயதில் ஏன் இப்படி முதுமை தட்டிப் போனார் விக்ரம் என்பதை நினைத்தால் கவலையாகவே இருக்கிறது. (சில குளோஸ் அப்புகளை தவிர்த்திருக்கலாமே மதி?) படத்தில் வரும் ஏராளமான மாறுவேட காட்சிகளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. ஆனால் அவையெல்லாம் ஒரு கேரக்டர்களாக உலவ முடியாமல் போனதும் வருத்தமே.
விக்ரம் எபிசோடில் நம்மை அதிகம் ரசிக்க வைத்தது தீக்ஷாவை தேடி ஒவ்வொரு லைட் கம்பமாக அவர் அலைகிற காட்சிதான். கடைசியில் எப்படி கண்டுபிடித்தார் என்பதும் சுவாரஸ்யமான சீன் பின்னல்.
இந்தகால அரசியல் பிரபலம் ஒருவரை நினைவுபடுத்துகிறார் அந்த பொலிட்டீஷியன் சனா. அவ்வளவு பெரிய ஊர்வலத்தில் தன்னருகில் வந்து குத்தல் காட்டிவிட்டு போகும் விக்ரமை, கோபமும் சிரிப்பும் கலந்த பார்வையோடு கொன்று போடுகிற சனாவின் கண்களுக்கும் உதடுகளுக்கும் தனித்தனியாக விருது பத்திரம் எழுதித்தரலாம்.
ஆறடி உயர அரளிப்பூவாக தீக்ஷா சேத். அதிகம் வேலை இல்லை இவருக்கு. அதனால் நாமும் அதிகம் பேச வேண்டியதில்லை.
முப்பது கோடிகளுக்கும் மேல் செலவு செய்து எடுக்கிற படத்தில் வடிவேலு, விவேக், சந்தானம் கூட வேண்டாம். அட்லீஸ்ட் சத்யன் கூடவா சிக்கவில்லை. இவர்கள் செய்ய வேண்டிய வேலையை வில்லன் நடிகராக பல படங்களில் வந்து போன அருள்தாஸ் செய்திருக்கிறார். உஸ்ஸ்ஸ்...
எல்லாரும் கோவக்காய். நான் மட்டும் ஏலக்காயா? என்று தனது பங்குக்கு சண்டித்தனம் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜாவும்.
விக்ரமுக்கு ஆறாவது தோல்வி என்பதுதான் நமது ‘ஆறாத’ கவலையும்.
-ஆர்.எஸ்.அந்தணன் 
                                                              WWW.TAMILCINEMA.COM

No comments:

Post a Comment