எளிமை, இனிமை, இவை தந்த பெருமை இம்மூன்றாலும் தன்னை நெருங்கி வரும் முதுமையை விரட்டிக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவரது பிறந்த நாளை முப்பாத்தம்மன் பால் குடம் மாதிரி கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் ஊர் முழுக்க. எந்த பண்பலை வானொலியை திருப்பினாலும் ஏய் ஆட்டோக்காரன் என்றோ, ஒருவன் ஒருவன் முதலாளி என்றோ பாடிக் கொண்டிருக்கிறார் ரஜினி. சேனல்களிலும் அதே உற்சாக திருவிழா.
உடுக்கை சத்தத்திற்கு முன் ஆடும் பூசாரியின் வேகத்தோடு ரஜினிக்காக தன்னையேதாரை வார்த்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த பிறந்த நாள் மட்டும் இன்னும் இன்னும் விசேஷம். அது ஏன் என்பதை அவ்வளவு அலசி பிழிந்து யோசிக்க தேவையில்லை. இசபெல்லாவில் ஆரம்பித்து சிங்கப்பூர் மருத்துவமனை வரைக்கும் அவரது உடம்பை ரணமாக்கின ஊசிகளும் மாத்திரைகளும். எல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டு தவித்தான் ரசிகன்.
வாழ்த்துக்களுக்கு நிகராக, விமர்சன அம்புகளுக்கும் நெஞ்சைக் கொடுத்த புண்ணியவான் ரஜினியாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் அவரை விமர்சித்தவர்கள் கூட, நெஞ்சார பிரார்த்தித்த தருணங்கள்தான் கடந்த சில மாதங்கள். எப்படியோ? எல்லாவற்றையும் கடந்து மரணத்தின் முடிச்சை அவிழ்த்துவிட்டு திரும்பிய வீரனாகிவிட்டார் ரஜினி.
இந்த பிறந்தநாள் மற்றவர்களை போலவே ரஜினிக்கும் சில கடமைகளை விதித்திருக்கிறது. அவற்றை பட்டியலிட்டால் பக்கம் நீளும் என்பதால், ஒரு விஷயத்தை மட்டும் பேசலாம். புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிப்பதை எப்போதுமே தவிர்த்து வந்த ரஜினி, தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் நடிப்பது குடும்ப விஷயம் என்று ஒதுக்கிவிட முடியாது. அதே நேரத்தில் தனது மகளின் திரையுலக பிரவேசத்திற்கு தன்னைவிட சிறந்த வழிகாட்டியும் கிடையாது என்று அவர் நினைத்திருக்கலாம்.
கோச்சடையான் படம் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி துவங்கப்பட்டிருக்கிறது.பொதுவாகவே ரஜினியின் புதுப்படங்கள் இப்படி வெறும் அறிவிப்போடு துவங்கப்படுவதல்ல. பெரிய பெரிய போஸ்டர்கள், பூஜை, துவக்க விழா என்று ஏக தடபுடலாக இருக்கும். ஆனால் இவை எதுவும் இல்லாத கோச்சடையான் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது மீடியாக்களிடத்திலும் மக்களிடத்திலும். ஊர் வாயை அடைக்கவாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த கட்டாயம் சவுந்தர்யாவுக்கு இருக்கிறதோ, இல்லையோ. ரஜினிக்கு இருக்கிறது.
ரஜினியின் டெடிக்கேஷன் பற்றி ஆயிரமாயிரம் சம்பவங்கள் சொல்வார்கள் திரையுலகத்தில். பஞ்ச் டயலாக் பேசிவிட்டு படக்கென்று கிடைக்கிற இடத்தில் தீக்குச்சி கொளுத்துவாரே, அந்த வித்தை எப்படி தெரியுமா? எந்த இடத்தில் நெருப்பு பற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ, அந்த இடத்தில் தீப்பெட்டியில் உரசும் பகுதியிலிருக்கும் அந்த மருந்து தடவப்பட்ட பேப்பரை கிழித்து தன் கைப்படவே ஒட்டுவாராம். ஒருவேளை தேய்க்க வேண்டிய இடம் முழுங்கால் பேண்ட் பகுதி என்று வைத்துக் கொள்ளுங்களேன். அந்த பேண்ட்டை வரவழைக்க செய்து, குறிப்பிட்ட பகுதியில் அந்த பேப்பரை வைத்து தன் கைப்படவே ஊசி நுலால் தைப்பாராம்.
இதை அவர் கேட்டால் செய்து தர ஆயிரம் பணியாளர்கள் தயாராக இருந்தாலும் அதை தன் கையால் செய்வதுதான் அவருக்கு திருப்தி. இப்படி ரசிகர்களுக்காக தன்னை எந்நேரமும் ஈடுபடுத்திக் கொண்ட அந்த மாபெரும் நடிகர், கோச்சடையான் விஷயத்திலும் வென்று காட்ட வேண்டும் என்பதே நமது tamilcinema.com-ன் பிறந்த நாள் வாழ்த்து.
வாழ்க ரஜினி, வளர்க அவரது ஸ்டைல்...
No comments:
Post a Comment