தியாகராஜன் ஹீரோவாக நடித்த அதே மம்பட்டியான்தான் இதுவும். தார்ப்தியாகராஜன் ஹீரோவாக நடித்த அதே மம்பட்டியான்தான் இதுவும். தார்ப்பாயை கிழித்து தடுக்காக தைத்த மாதிரி கச்சிதமான மாற்றங்களோடு உறுமியிருக்கிறார் இந்த மம்பட்டியானும். பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் தகப்பனை மிஞ்சிய தனயனா என்றால் ஒரு சின்ன ஹி...ஹி..தான் நமது பதில். ஜெயமாலினி வேடத்தில் முமைத்கான். சரிதா கேரக்டரில் மீராஜாஸ்மின் என்று நாதஸ்வரத்துக்கும் மவுத்தார்கானுக்கும் இருக்கிற வித்தியாசம் இருக்கிறது எல்லாவற்றிலும்.
தனது நேர்மையான தந்தையை கொன்றவர்களை வெட்டி சாய்த்துவிட்டு காட்டுக்குள் பதுங்கிவிடுகிறார் மம்பட்டியான் பிரசாந்த். அங்கிருந்து கொண்டே ஊர் மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்கிறார். ஒருபுறம் போலீஸ் தேடிக் கொண்டே இருக்கிறது. இருமுறை சிக்கிக் கொள்ளும் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களுக்கும் அல்வா கொடுக்க, எப்பிடிறா பிடிப்பாய்ங்க என்கிற ஆவலை கிளறி விடுகிறார் இயக்குனர் மம்பட்டியான். (இதுவும் தியாகராஜன்தான், தெரியுமோ? )
‘வரலாற்றில் என் பெயர் இருக்கும். என்னை தேடிகிட்டே இருப்பீங்க’ என்று போலீசிடம் சவால் விடும் மம்பட்டியான் கடைசியில் செத்துப்போவது கூடவே திரியும் ஒரு கரப்பான்பூச்சியால் என்பதுதான் திடுக்கிடும் திருப்பம். (இந்த கேரக்டரில் நடித்திருக்கும் நடிகருக்கு நிஜமாகவே முகத்தில் பால் வடியுது)
மகனை அப்பாவே இயக்கும்போது நேர்கிற அத்தனை சங்கடங்களும் படத்தில் இருக்கிறது. ஆனால் துருத்திக் கொண்டு தெரியவில்லை. உதாரணமாக பதற வேண்டிய நிர்பந்தங்களில் கூட பிரசாந்த் புன்னகைத்துக் கொண்டே அவற்றை எதிர்கொள்கிற காட்சிகளை சொல்லலாம். சரித்திர புருஷர்களுக்குரிய மடேர் மடேர் தோள்களும், அவற்றை மறைக்கும் கருப்பு போர்வையுமாக பிரசாந்த் திரிவது, காட்டு சிங்கம் போன்ற கம்பீரம் தருகிறது. மெல்ல மீராஜாஸ்மினின் காதலில் அவர் விழுகிற காட்சிகளும் பூ மலர்வது போல அழகு. குறிப்பாக ஒரு விஷயத்தை பாராட்டலாம். அது பிரசாந்தின் டப்பிங்குக்காக. அந்த கரகர அடித்தொண்டை குரலுக்காக எத்தனை ஹால்ஸ் மற்றும் இஞ்சி மரபாக்களை முழுங்கினாரோ?
ஒரு போலீஸ் அதிகாரியை பிரசாந்த் அடித்து துவைத்து அரை உயிராக மரத்தில் கட்டி வைத்து கழுகுக்கு இரையாக்கும் அந்த தந்திரம் குரூரம் என்றாலும் அபாரம். பிரகாஷ்ராஜ் கைகளில் சிக்கி, கடைசியில் அவர் கழுத்தை சுருக்கிட்டு தப்பிக்கும் இன்னொரு காட்சியிலும் தியேட்டரை அதிர வைக்கிறார்கள் தந்தையும் மகனும்.
24 கேரட் தங்கம் மம்பட்டியானை அவசரப்பட்டு குறை சொல்லிவிட்டோமே என்ற பதற்றத்தில் தன்னையே தாரை வார்க்கும் மீராஜாஸ்மினின் காதலும், நியாயமும் ஒரு ஆற்றங்கரையில் சமாதியாவதுதான் சோகம்.
அப்போதுதான் ஜிம்முக்கு போய் ‘பெஞ்ச் பிரஸ்’ செய்துவிட்ட வந்த மாதிரி படம் முழுக்க திறந்தே கிடக்கிறார் முமைத்கான். இந்த திறந்தவெளி சந்தோஷமே சீக்கிரம் டிக்கெட்டுகளை விற்க வைத்து கவுன்ட்டர்களை ‘மூட’ வைக்கும்.
ஒரு சில காட்சிகளே வந்தாலும், பிரகாஷ்ராஜின் பாணி வழக்கம் போல பலே பலே...
பல மாதங்கள் கழித்து திரையில் உலா வருகிறது வைகைப் புயல். சீறும் என்று நினைத்தால் சீலிங் ஃபேன் கெட்டது போங்கள்...
மேக்கப் கலைமாமணி சுந்தரமூர்த்தி என்கிறது டைட்டில். ஆனால் குளத்தில் மூழ்கி எழுந்தால் கூட முகச்சாயம் கலையாமல் எழுகிறார்கள் அத்தனை பேரும். என்ன கலைமாமணியோ?
தமனின் இசையை அலுத்துப் போகாமல் செய்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. இவரது காட்டு வழி போறப் பெண்ணேவையும், சின்ன பொண்ணு சேலையையும் ரிப்பீட் அடித்திருக்கிறார் தமன். ஆயிரம் இருந்தாலும் பழசு பழசுதான்...
ஷாஜி குமாரின் ஒளிப்பதிவை மேலும் அழகாக்கியிருக்கிறது டிஜிட்டல் இமேஜ்.
அருவா அதேதான். ஆத்திரமும் அதேதான். சாணை பிடித்த விதத்தில்தான் சற்றே சற்று சறுக்கல்...
-ஆர்.எஸ்.அந்தணன்
No comments:
Post a Comment