வருஷத்தை பெருக்கி அள்ளி வாரிக் கொட்டும் போதுதான் தெரிகிறது, அதில் எத்தனை மாணிக்கங்களும் மரகதங்களும் குப்பையோடு குப்பையாக போனதென்று? ஒவ்வொரு வருடத்திலும் ஏதாவது சில நல்ல படங்கள் வெளியாவதும், பெட்டி செலவு, போஸ்டர் செலவு கூட தேறாமல் முடங்கிப் போனதும் நடந்து கொண்டே இருக்கிறது. கட்டு சோற்றில் இருக்கிற ருசி, பர்கர்களிலும் பீட்சாக்களிலும் இல்லை என்பது இவ்வளவு நல்ல படங்கள் ஓடாமல் போனதே என்ற வருத்தம் வருகிற மாதிரியே, இந்த குப்பையெல்லாம் ஓடித் தொலைத்ததே என்ற வருத்தமும் வந்து சேரும். 2011 ம் அப்படி பல அனுபவங்களை நமக்கு விதைத்த வருடம்தான். நேற்று வெளிவந்த 'மகான் கணக்கு' படத்தோடு முடிந்தது 2011 ல் சிறு படங்கள் தந்த பிரமிப்பு. ஓசிஓசி பேங்க் போன்ற பன்னாட்டு வங்கிகளால் பந்தாடப்படும் நடுத்தர வர்கத்தின் வலியை அப்படியே நம் மனசிலும் ஏற்றியிருந்தார் டைரக்டர் சம்பத் ஆறுமுகம். இதுபோன்ற கதைகளுக்கு பெரிய நடிகர்கள் டேட்ஸ் கொடுத்திருந்தால், சமுதாயத்தில் பெரிய புரட்சியே விதைக்கப்பட்டிருக்கும். ஹ்ம்ம்ம்ம்... அதற்கெல்லாம்தான் நமக்கு கொடுப்பினை இல்லையே? ஜல்லிக்கட்டில் இறக்கிவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளை போல தத்தளித்துப் போன சில சிறு படங்களை கணக்கிலிருந்து விட்டுத் தள்ளினாலும், சில படங்கள் நம் நெஞ்சை விட்டு அகலாதவை. களவாணியில் பெருமை சேர்த்த சற்குணம், பெரும் பொருட் செலவில் இயக்கிய சங்ககிரியிலிருந்து குடும்பதோடு வந்து கோடம்பாக்கத்தை மிரள வைத்தார் ராச்குமார் என்ற இளைஞர். வெங்காயம் படத்தின் மூலம், பெரியாருடைய சிந்தனைகளை அழகாக எடுத்துச் சொல்லியிருந்தார். இப்படத்தின் தயாரிப்பும் இவரே, முக்கியமான கூத்துக்காரர் கேரக்டரில் இவரது அப்பாவும் நடித்திருந்தார். படத்தில் நடித்த அத்தனை பேரும் இவரது சுற்றுப்பட்டு கிராமத்து சொந்தங்கள்தான். 'வீடு வயல் நிலத்தையெல்லாம் வித்துட்டுதான் இந்த படம் எடுக்கிறேன். ஓடலைன்னாலும் பரவாயில்லை. கை கால் நல்லாயிருக்கு. சம்பாதிச்சுக்கலாம்' என்று தன்னம்பிக்கையோடு இந்த இளைஞர் பேசியதை உணர்ச்சிப் பெருக்கோடு கவனித்தார்கள் பலரும். இந்த படத்தை எப்படியாவது மீண்டும் திரையிட்டு ஓட வைத்துவிட வேண்டும் என்று மெனக்கட்ட டைரக்டர் சேரன், நடிகை ரோஹிணி ஆகியோருக்கு இந்த நேரத்திலாவது நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை. 2012 லாவது மறு ரிலீஸ் செய்வார்கள் என நம்புகிறேன். ரசிகர்களுக்கு ராஜ'பட்டை' போட்ட சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'அழகர்சாமியின் பாரதிராஜாவை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தோம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் அநேக மாணவர்கள் அவரை மிஞ்சிய ஸ்டூடண்ட்டாக இருக்கிறார்களே என்ற வியப்பை ஏற்படுத்தினார் டைரக்டர் சீனு ராமசாமி. இவரது 'தென்மேற்கு பருவக்காற்று' படமும் வசூலை பொறுத்தவரை முக்கல் முனகல் ரகம்தான். ஆனால் தமிழ்சினிமாவுக்கே பெருமை ஏற்படுத்திய படம். இதற்கு தேசிய விருதுகளை அளித்து பழி பாவத்திலிருந்து தப்பித்துக் கொண்டது மத்திய அரசு. அதிக பாராட்டுகளை பெற்ற இன்னொரு படம் 'எங்கேயும் எப்போதும்'. நல்லவேளை, நவீன கால பீம்சிங் என்று அழுகாச்சி ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட ராசு.மதுரவனுக்கும் ஒரு இடம் தரலாம் இந்த வருடத்தில். மற்றபடி குள்ளநரிக்கூட்டம், வர்ணம், நர்த்தகி என்று குறிப்பிட்டு சொல்ல மேலும் சில படங்கள் இருக்கின்றன. பாவம் இப்படங்களையும் தோல்வி லிஸ்ட்டில் வைத்துதான் தேம்ப வைத்தார்கள் பாழாய் போன இந்த படுபாவி ரசிகர்கள். -ஆர்.எஸ்.அந்தணன் |
Sunday, 1 January 2012
திரும்ப வைத்த படங்களும் திகைக்க வைத்த மக்களும் -2011 ல் ஒரு பிளா(ஷ்)க்பேக்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment